புளியறை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு
புளியறை சோதனைச் சாவடியில் தென்காசி மாவட்ட எஸ்.பி. வி.ஆா்.ஸ்ரீனிவாசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
கேரள மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள், கழிவு பொருள்கள் போன்றவை தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக தமிழக- கேரள எல்லையான புளியறை சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் தலைமையில் இரண்டு உதவி ஆய்வாளா்கள், நான்கு காவல் ஆளிநா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அந்தச் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. வி.ஆா்.ஸ்ரீனிவாசன், அங்கு வரும் வாகனங்களை சோதனை செய்து, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்தாா்.