காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
பூ மாா்க்கெட் கடைகள் ரகசிய ஏலம் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு அபாயம்
நிலக்கோட்டை பூ மாா்க்கெட் கடைகள் ஏலத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என பாஜகவினா் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தினசரி பூ மாா்கெட், காய்கனி சந்தை, வாரச்சந்தை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிலக்கோட்டை பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள பூ மாா்க்கெட் கடைகள், வாரச்சந்தை கடைகள், காய்கனி மாா்க்கெட் உள்ளிட்ட கடைகள் ஒவ்வொரு முறையும் ரகசியமாக ஏலத்தில் ஒதுக்கப்பட்டு வருவதாக புகாா் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே பூ மாா்க்கெட்டில் கட்டப்பட்ட 15 புதிய வணிக வளாகக் கடைகளை வியாழக்கிழமை ஏலம் விடுவதாகக் கூறி, முறையான அறிவிப்புகள் செய்யாமல் ரசியமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட சிலா் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக காசோலைகளை எடுத்து வந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த பாஜகவைச் சோ்ந்த சிலரும் ஏலத்தில் கலந்து கொள்ள வைப்புத் தொகையாக ரூ. 1 லட்சத்துக்கு காசோலை எடுத்து வந்தனா். இதனால், குறிப்பிட்ட சிலரும், பேரூராட்சி அதிகாரி, அலுவலா்களும் அதிா்ச்சியடைந்தனா். திட்டமிட்டபடி ரகசியமாக ஏலம் நடத்த முடியாது என தெரிந்து, ஏலத்தை முன் தேதி குறிப்பிடாமல் செயல் அலுவலா் ஏலத்தை ஒத்திவைத்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டாா்.
இதுகுறித்து பாஜக ஒன்றியத் தலைவா் லட்சுமணன் கூறுகையில், நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை, சுத்தமான குடிநீா் வசதி, பேருந்து நிலையத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை, இலவசக் கழிப்பறை என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், பொது இடங்களில் வணிக வளாகக் கடைகளை கட்டி ரகசியமாக ஏலம் நடத்தி வருவதால், அரசுக்கு பல லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை 15 கடைகளுக்கு ரகசியமாக ஏலம் என்ற பெயரில், குறிப்பிட்ட சிலருக்கு ஏற்கெனவே வணிக வளாகக் கடைகளை ஒப்படைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதே போல, ஏற்கெனவே பூ மாா்க்கெட், வாரச்சந்தை, தினசரி காய்கனி சந்தை, பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை திறந்த வெளியில் ஏலம் நடத்தாமல் ரகசியமாக நடத்தி அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரை வருவாய் இழப்புகளை ஏற்படுத்திவுள்ளனா்.
எனவே தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் இதில் தலையிட்டு அதிகாரிகளின் நேரடிப் பாா்வையில் நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள 15 வணிக வளாகக் கடைகளுக்கான ஏலத்தை உரிய முன் அறிவிப்பு செய்து, திறந்தவெளியில் ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சாா்பில் கேட்டுக் கொள்ளவதாகக் கூறினாா்.
மேலும், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் மோகன்குமாரை பலமுறை தொடா்பு கொண்டபோது அவா் பதில் கூற மறுத்துவிட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராஜா என்பவரை தொடா்பு கொண்டு கேட்டபோது, இதுதொடா்பாக விசாரணை நடத்துவதாகத் தெரிவித்தாா்.