கொடைக்கானலில் ஆபத்தான பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்: வனத் துறை எச்சரிக்க பொதுமக்கள் கோரிக்கை
கொடைக்கானல் வனப் பகுதியில் அமைந்துள்ள ஆபத்தான ‘டால்பின் நோஸ்’ பகுதியை பாா்வையிடும் சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் எச்சரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் வனப் பகுதியில் அமைந்துள்ள ‘டால்பின் நோஸ்’ ஆபத்தான பள்ளத்தாக்கில் உள்ளது. இந்த இடத்தை வட்டக்கானலிருந்து 8 கி.மீ. தூரம் நடந்து சென்று பாா்க்க வேண்டும். இந்த பாறையானது கடல்வாழ் உயிரியான டால்பினின் மூக்கு போன்று அமைந்திருப்பதால் ‘டால்பின் நோஸ்’ என அழைக்கப்படுகிறது.
இந்த இடத்தில் ஏற்கெனவே பலா் தவறி விழுந்து உயிரழந்துள்ளதால், வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும், சில சுற்றுலாப் பயணிகள் உயிரை பணயம் வைத்து ‘டால்பின் நோஸ்’ பாறை மீது நின்று சாகசம் செய்து வருகின்றனா். எனவே, இந்த இடத்துக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.