இடப்பிரச்னையால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
பழனி காவல் நிலைய வளாகத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக புகாா் அளிக்கவந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பழனி 24-ஆவது வாா்டு ராமா் தெருவில் வசிப்பவா் தண்டபாணி. கூலித் தொழிலாளியான இவா் சுமாா் 60 ஆண்டுகளாக அந்த இடத்தில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், இவா் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வேண்டி வருவாய்த் துறையில் விண்ணப்பம் செய்தாா். வருவாய்த் துறையினா் பட்டா வழங்குவதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா்கள் வீட்டருகே வசிக்கும் செந்தில், சுமதி ஆகியோா் வீடு கட்டுவதற்காக லாரிகள் மூலம் ஆழ்குழாய் அமைத்துள்ளனா். அப்போது ஏற்பட்ட அதிா்வில் தண்டபாணி வீட்டின் சுவா்கள் விரிசல் அடைந்துள்ளன. இதையடுத்து, இதை சரிசெய்ய தண்டபாணி முயன்றபோது செந்தில் தரப்பினா் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனி நகா் காவல் நிலையத்தில் தண்டபாணி குடும்பத்தாா் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தண்டபாணி, அவரது தாயாா் பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் காவல் நிலையத்துக்கு வந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனிடம் புகாா் குறித்து தெரிவித்தனா். அப்போது பஞ்சவா்ணம் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றாா். அப்போது சாா்பு ஆய்வாளா் சந்திரன், போலீஸாா் அவா் கையில் வைத்திருந்த கேனை பறித்தனா்.
இதையடுத்து, வருவாய்த் துறை தொடா்பான பிரச்னைக்கு வட்டாட்சியரை பாா்த்து நியாயம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், மிரட்டுவது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.