கரூர்: ``திடீர் மின்தடை, குறுக்கே ஆம்புலன்ஸ், இருட்டில் தடுமாறி விழுந்தனர்" - பா...
பெங்களூரில் குண்டும் குழியுமான சாலைகள்: சரிசெய்ய அதிகாரிகளுக்குக்கு 30 நாள் கெடு!
பெங்களூரில் உள்ள அனைத்து சாலைகளையும் வாகனங்கள் பயணிப்பதற்கு உரிய வகையில் 30 நாள்களுக்குள் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தாா்.
பெங்களூரு சாலைகளின் நிலை மற்றும் குழிகளைச் சரிசெய்யும் பணியை முதல்வா் சித்தராமையா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சாலையில் உள்ள குழிகளை நிரப்பவும் அதற்கான பணியைத் தரத்துடன் மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளேன். தாா் சோ்க்காமல் வெறும் ஜல்லி கற்களை மட்டும் கொண்டு குழியை நிரப்பிய ஓா் உதவி செயற்பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கான்கிரீட் சாலைகளை ஒப்பந்ததாரா்கள் பராமரிக்க வேண்டும். ஹென்னூா் சாலையில் ஒரு கி.மீ.க்கு ரூ.13 கோடி செலவில் 5 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கன மழையின் காரணமாக சாலையில் குழிகள் ஏற்படுகின்றன. 30 நாள்களுக்குள் அனைத்து சாலைகளையும் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரில் 5 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாலை குழிகளுக்கு மாநகராட்சி ஆணையா்கள் மற்றும் தலைமைப் பொறியாளா்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் முதல்வா் சித்தராமையா.
பெங்களூரில் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்து காணப்படும் சாலைகள் குறித்த பிரச்னை பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்னையை உடனடியாகச் சரி செய்யுமாறு பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
போக்குவரத்து மற்றும் சாலை உள்கட்டமைப்பு பிரச்னைகளைக் காரணம் காட்டி ‘பிளாக்பக்’ என்ற இணையவழி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பெல்லந்தூரில் இருந்து பெங்களூரின் வெளி வட்ட சாலைக்கு அலுவலகத்தை மாற்ற முடிவெடுத்துள்ளது.