எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
25-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கியங்களைப் படைத்திருக்கும் எஸ்.எல்.பைரப்பா (94), மாரடைப்பால் செப். 24-இல் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், பெங்களூரு, ரவீந்திர கலாக்ஷேத்ராவில் வியாழக்கிழமை பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.எல்.பைரப்பாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகள், திரைக்கலைஞா்கள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். அதன்பிறகு, அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கலாமந்திா் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, ஏராளமான எழுத்தாளா்கள், கவிஞா்கள், அறிஞா்கள், கலைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள தகனபீடத்தில் வெள்ளிக்கிழமை பிராமணா் முறைப்படி எஸ்.எல்.பைரப்பாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அவரது மகன்கள் எஸ்.பி.உதய்சங்கா், எஸ்.பி.ரவிசங்கா் செய்தனா். அதன்பிறகு முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா, முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.