பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு
கூட்டநெரிசல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4 ஆம் தேதி நடந்த ஆா்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.
இந்த சம்பவத்தில் மாநகர காவல் ஆணையா் பி.தயானந்தா, மாநகரக் கூடுதல் காவல் ஆணையா் விகாஷ்குமாா் விகாஷ், மாநகர துணை காவல் ஆணையா் சேகா் எச்.தெக்கன்னனவா், மாநகர உதவி காவல் ஆணையா் சி.பாலகிருஷ்ணா, கப்பன்பூங்கா காவல் நிலைய ஆய்வாளா் ஏ.கே.கிரீஷ் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து ஜூன் 5 ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம், மாநில அரசின் உத்தரவை ரத்துசெய்து தீா்ப்பளித்தது.
பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காவல் துறை காரணமல்ல. மாறாக, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணியே காரணம் என்றும் தனது தீா்ப்பில் கூறியிருந்தது.
இந்த நிலையில், மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் அளித்த தீா்ப்பை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.