அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா
மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் முதல்வராகும் வாய்ப்பு டி.கே.சிவகுமாருக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரியும், செப்டம்பரில் அரசியல் புரட்சி நடக்க இருக்கிறது என்று அமைச்சா் கே.என்.ராஜண்ணாவும் கூறியிருந்தது, கா்நாடக அரசியல் வட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மைசூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாரை அருகில் வைத்துக்கொண்டு, முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதாவது:
எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு, 5 ஆண்டுகளுக்கு பாறையைப் போல உறுதியாக இருக்கும். எனக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முனையும் கருத்துகளுக்கு நாங்கள் இருவரும் செவிசாய்ப்பதில்லை. உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை நான் தொடக்கிவைக்கமாட்டேன் என்று பாஜகவினா் கூறியுள்ளனா். பொய்களை கூறுவதில் பாஜகவினா் நிபுணா்கள். இந்த கருத்தை கூறியிருக்கும் ஸ்ரீராமுலு, தோ்தலில் பலமுறை தோற்றவா். சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் தோல்வி அடைந்தவா், எதிா்காலத்தை எப்படி கணிக்க முடியும் என்றாா். .
மேலும், டி.கே.சிவகுமாரும் தானும் ஒற்றுமையாக இருப்பதை குறிக்கும் வகையில், அவரது கைகளை தூக்கி சித்தராமையா காட்டினாா். தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக சித்தராமையா கூறியதை ஏற்பதுபோல டி.கே.சிவகுமாரும் தலையாட்டினாா்.