பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி
எட்டயபுரத்தில் பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
எட்டயபுரம் காவலா் குடியிருப்பை சோ்ந்தவா் ஜேசுராஜ் (47). டிராக்டா் மூலம் கட்டுமானத் தொழிலுக்கு தண்ணீா் விநியோகம் செய்து வருகிறாா். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜேசுராஜ் தனது டிராக்டரை கீழ வாசல் பகுதியிலுள்ள தனியாா் தீப்பெட்டி தொழிற்சாலை அருகே வழக்கம்போல் நிறுத்திவிட்டு, சற்று தொலைவிலுள்ள வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 இளைஞா்ககள் காவல் நிலையம் அருகே அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி அவரிடமிருந்த கைப்பேசியைப் பயன்படுத்தி ஜி.பே. மூலம் ரூ.2,300 பணத்தை பறித்ததுடன், கைப்பேசியை உடைத்து எறிந்து விட்டு மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
ஜேசுராஜ் ரத்த காயங்களுடன் தனது வீட்டுக்கு சென்றுள்ளாா். குடும்பத்தினா் அவருக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னா் கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.