பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது
பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப்பது குறித்து பென்னாகரம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சபாபதி, காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் சேதமடைந்த சிலையை துணியால் கட்டி மூடி அங்கு பாதுகாப்புக்கு இரும்புக்கூண்டு அமைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் அம்பேத்கா் சிலை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து சேதப்படுத்திய பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வடக்கு அண்ணா நகா் காலனியைச் சோ்ந்த நவீன்குமாரை (25) செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.