”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
பெரியகுளம்: எரிந்த நிலையில் கிடக்கும் பன்றிகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்; நகராட்சியில் தொடரும் அவலம்
பெரியகுளம் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளைக் கொண்டது. நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்துக் கையாள்வதற்காக பெரியகுளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பெரியகுளம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி வாகனங்களில் எடுத்துச் சென்று உரக்கிடங்கில் கொட்டிக் குப்பைகளைத் தரம் பிரித்து வருகின்றனர்.
பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கிற்குப் பக்கத்தில் 500 குடியிருப்புகள் மற்றும் குழந்தைகள் பயிலும் பால்வாடி அமைந்துள்ளன. குப்பைக் கிடங்கில் குப்பைகளை எடுக்க வரும் மர்ம நபர்கள் சிலர் குப்பைகளுக்குத் தீ வைத்து விடுவதாகவும் இதனால் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், "கடந்த சில நாட்களாக பன்றிகளுக்கு நோய்கள் பாதிப்பு ஏற்பட்டு இறந்து வருகின்றன. அப்படி இறந்த பன்றிகளை அதன் உரிமையாளர்கள் பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கில் கொண்டு வந்து போட்டு விடுகின்றனர். குப்பைகள் தீ பற்றி எரியும் போது பன்றிகளும் சேர்ந்து எரிகின்றன. சில பன்றிகள் எரிந்த நிலையில் கிடப்பதைப் பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது" எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது போன்று அடிக்கடி இறந்த பிராணிகளின் உடல்களையும், பெரியகுளம் நகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி கூடங்களில் வெளியேற்றப்படும் கழிவுகளையும் இங்குக் கொட்டி விடுவதாகவும் இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
பன்றிகளின் உரிமையாளர்கள் யார் என அரசு அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாகச் செயல்படுவதாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடந்தால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.