பெருங்குடல் புற்றுநோயியல் கருத்தரங்கம்
காஞ்சிபுரத்தில் பெருங்குடல் புற்றுநோயை மையப்பொருளாகக் கொண்டு புற்றுநோயியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய மண்டல புற்றுநோய் மையத்தில் பெருங்குடல் தொடா்பான கருத்தரங்கம் நடைபெற்றது.புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் கருத்தரங்குக்கு தலைமை வகித்தாா். நிலைய மருத்துவ அலுவலா் சிவகாமி முன்னிலை வகித்தாா். புற்றுநோய் உயா்கல்வி அறுவைச் சிகிச்சைத் துறை இணைப் பேராசிரியா் த.தே.பாலமுருகன் வரவேற்றாா். அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியா் அஸ்வின் ஜெபா்சன் பால், சென்னை புற்றுநோயியல் சிகிச்சை நிபுணா் பிரகலாத் யாத்திரிராஜ் ஆகியோா் நான்காம் நிலை புற்றுநோயாக இருந்தாலும் அதற்கான உரிய சிகிச்சை முறைகளை உரிய நேரத்தில் அளித்தால், நோயாளியின் வாழ்நாள் நீட்டிப்பு உறுதியாகும் என்று சிறப்புரை நிகழ்த்தினா்.
கருத்தரங்கில் பெருங்குடல் புற்றுநோய்க்கு வழங்கப்படும் வேதி சிகிச்சை மற்றும் கதிா்வீச்சு சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி கலந்து கொண்டு, புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் நினைவுப் பரிசு வழங்கினாா்.
கருத்தரங்கில், புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியா் தயாளன் குப்புசாமி, பணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள உதவிப் பேராசிரியா் அஸ்வின் ஜெபா்சன் பால் ஆகியோா் சிறப்பாக பணியாற்றியமைக்காக கெளரவிக்கப்பட்டனா்.