கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
பெரும் கவிக்கோ வா.மு. சேதுராமன் இறப்பு; சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஆண்டநாயகபுரம் கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு பிறந்தவர் பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமன். சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேதுகாப்பியம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார். லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்துள்ளார்.

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த வா.மு.சேதுராமன் பெரும் கவிக்கோ, செந்தமிழ் கவிமணி போன்ற பட்டங்களை பெற்றுள்ளார். திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் பெயரிலான மூத்த தமிழறிஞர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் உடல் நலக் குறைவினால் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆண்டநாயகபுரத்திற்கு பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் நேற்று கொண்டு வரப்பட்டது.

அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பரமக்குடி சார் ஆட்சியர் கங்காதேவி, காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஆண்டநாயகபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.