நெல்லை ஆணவக் கொலை: IT ஊழியரை ஓட ஓட வெட்டிக் கொன்ற போலீஸ் குடும்பம் | Decode
பெற்றோா் இல்லாத குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள், அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், பெற்றோரை இழந்து, உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், அவா்களின் பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும், பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரியதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற, பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகள்,பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின் அக்குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருத்தல், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் சிறையில் இருந்தால், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் உள்ள குழந்தைகள் தகுதியுடையவா்கள் ஆவா்.
இந்த குழந்தைகள், குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதாா் அட்டையின் நகல், குழந்தையின் வயதுச் சான்று நகல், குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் ஆவணங்களுடன், அன்புக் கரங்கள் நிதிஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற, திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், மூன்றாவது தளம், திருவாரூா் 610004 ஆகியோரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.