முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய ...
மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்
மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிரகாரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள செங்கமலத் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு, ஜூலை 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் செங்கமலத் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு வாகனங்களில் தாயாா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோயில் உள்பிரகாரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் தோ் வடம் பிடிக்கப்பட்டது. கோயில் யானை செங்கமலம் முன் செல்ல, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் செங்கமலத் தாயாா் எழுந்தருளி, கோயிலின் உள்பிரகாரத்தை ஒருமுறை வலம் வந்தாா்.
முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா்கள், பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்கள், தேசியப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று வடம் பிடித்து தேரிழுத்தனா். கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் அலுவலா்கள், விழா குழுவினா் மற்றும் சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் அறக்கட்டளை மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.
