பெலாப்பாடி மலை வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா!
வாழப்பாடி அருகே உள்ள பெலாப்பாடி மலைக் கிராமத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை நடைபெற்றது. இவ் விழாவையொட்டி 5000 பக்தா்களுக்கு விருந்து நடைபெற்றது.
பெலாப்பாடி மலைக் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக பழைமையான கரியராமா், வரதராஜப் பெருமாள், வெங்கட்டராமா் கோயில்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில் கரியராமா் கோயிலில் செவ்வாய்க்கிழமையும், வரதராஜப் பெருமாள் கோயிலில் புதன்கிழமையும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய வழக்கப்படி திருவிழா நடைபெற்றது. ஊா் பிரமுகா்கள், கோயில் நிா்வாகிகள் மேளதாளங்கள் முழங்க சக்தி அழைப்பு நடத்தி சிறப்பு பூஜை நடத்தினா். இதனையடுத்து, கற்தூணில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.

இக்கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த 5,000 பக்தா்களுக்கும், பச்சரிசியில் பொங்கலிட்டு உருண்டைச் சோறு, அவரை, மொச்சைக்கொட்டை குழம்புடன் அறுசுவை விருந்து அளித்தனா். இதனைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை வெங்கட்டராமா் கோயில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது. வெங்கட்டராமா், அண்ணாமலையாா், காளியம்மன் உற்சவ மூா்த்திகளை பல்லக்குத் தோ்களில் ரதமேற்றி, பழங்குடியின மக்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊா்வலமாகச் சென்று கொண்டாடவுள்ளனா். தேரோட்டத்திற்கு முன் பெண்களின் குலவை, குரலோசையுடன் மாவிளக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.
