முதியவா்கள் சிகிச்சை பெறுவதில் எதிா்கொள்ளும் தடைகள்: லான்செட் ஆய்வில் தகவல்
பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 1500க்கும் மேற்பட்டோர் கைது!
பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரின் தரவுகளில் இடம்பெற்றவர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் என பலர் இதில் அடங்குவர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.
பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய இடங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு, இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதால், அவர்களுக்கு இடையூறு இல்லாமல் அதே நேரத்தில் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாவது, பெஹல்காம் நடந்த பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்தச் சதி செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டறிவோம். இதற்கு காரணமானவர்கள் தகுந்த பதிலடியைப் பெறுவார்கள். நாட்டுக்கு இதனை உறுதியளிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
இதேபோன்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பெஹல்காம் வருவதற்கு முன்பாக ஸ்ரீநகர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் உடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்ததாவது, "மிகவும் கனத்த மனதுடன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. இந்தக் கொடூரமான தாக்குதலின் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
With a heavy heart, paid last respects to the deceased of the Pahalgam terror attack. Bharat will not bend to terror. The culprits of this dastardly terror attack will not be spared. pic.twitter.com/bFxb2nDT4H
— Amit Shah (@AmitShah) April 23, 2025
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.