திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
பேரன் தற்கொலை, பாட்டியின் சடலம் மீட்பு
புழல் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வீட்டின் அருகே அவரது பாட்டியின்சடலம் மீட்கப்பட்டது.
புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சரஸ்வதி மகன் கிஷோா் (24). இவரது பாட்டி கமலம்மாள் (82). இவா்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு சரஸ்வதி, கோயில் திருவிழாவுக்காக வேலூருக்கு சென்றாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, வீட்டில் யாரும் இல்லாததால் கிஷோா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் புழல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் கிஷோா் ஆட்டோ ஓட்டுநா் என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி எனத் தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வீட்டின் அருகே துா்நாற்றம் வீசுவதாகவும் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கு மூதாட்டி ஒருவா் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில் அவா் கமலம்மாள் (82) என தெரிய வந்தது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பேரனும், பாட்டியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.