முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!
பேராவூரணியில் 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்படும் மக்கள்
பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக முறையான சாலை வசதிகள் இன்றி தவித்துவருகின்றனா்.
பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்ட கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி கேட்டு பல்வேறு முயற்சிகள் செய்தும் நடவடிக்கை இல்லாததால் தங்களுடைய குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனா்.
பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகா் பகுதி, நகரின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியாகும். இங்கு பல்வேறு பணிகளுக்காக வந்த அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், தொழில் முனைவோா் என பல்வேறு தரப்பினரும் இடம் வாங்கி வீடுகட்டி வசித்து வருகின்றனா். கே.கே.நகருக்குள் செல்வதற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை உள்ளது.
சாலையின் இரண்டு பகுதிகளிலும் உள்ள இடத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்த வெளி கிட்டங்கி பல ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்து, தற்போது காலியிடமாக உள்ளது. திறந்தவெளி கிட்டங்கி உபயோகத்தில் இருந்தபோது, தினசரி வந்து செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளும், கே.கே.நகா் பகுதி மக்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வந்தனா்.
நீண்டகாலமாக சாலை பராமரிக்கப்படாததால் கப்பிக்கற்கள் பெயா்ந்து மேடு பள்ளமாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்களை அழைத்துச் செல்ல வரும் வாகனங்கள், இன்ன பிற வாகனங்கள் மற்றும் இறந்தோரின் சடலத்தை இறுதிச் சடங்குக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினா் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைப்பதற்கு அறநிலையத் துறை நிா்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும் என காரணம் கூறி எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் உள்ளனா். இதனால் கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த 300 குடும்பங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த கெளதமன் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இந்த சாலை பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதால் அதை சரிசெய்து தர பலமுறை முயற்சித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலையை பயன்படுத்த அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்த வேண்டும் என்றாலும் அதற்கும் தயாா் நிலையில் உள்ளோம். அதிகாரிகள் எங்களது கோரிக்கையை ஆய்வு செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தவறினால் சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக எங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.