15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
பேராவூரணியில் தேவயானி; `அப்பா - மகளுக்கான அன்பு இதை நிகழ்த்தியிருக்கிறது’ - `காதல் கோட்டை’ அகத்தியன்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற ஹோட்டல் திறப்பு விழா ஒன்றில் நடிகை தேவயானி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். அப்போது இயக்குநர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி, பொன்னாங்கண்ணிக்காடு கிராமம் என்பதை சிலர் தேவயானியிடம் சொல்லியுள்ளனர். இதில் ஆச்சர்யமடைந்த தேவயானி, `அப்படியா அவர் வீடு எங்கு உள்ளது?’ என்று கேட்டுள்ளனர். அகத்தியன் சென்னையில் இருக்கிறார் அவர் அக்கா சுசீலா ஊரில் இருப்பதாக சொல்லியுள்ளனர்.
``’காதல் கோட்டை’ படம் மூலம் எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்தவர் அகத்தியன், அவர் எனக்கு அப்பா மாதிரி, அவரோட ஊருக்கு வந்திட்டு, நான் அவங்க உறவினர்களை பார்க்காமல் போககூடாது’னு” சொல்லிட்டு வீட்டுக்குச் சென்று அக்கா சுசீலாவை பார்த்து நலம் விசாரித்துள்ளார். இதையறிந்த அகத்தியன், ``என்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தில் தான் நடித்திருக்கிறார். ஆனாலும் தேவயானி இன்றைக்கும் நன்றியுணர்வோடு இருப்பதாக” நெகிழ்ந்திருக்கிறார். பேராவூரணி பகுதியில் இது குறித்து பலரும் நெகிழ்ந்து பேசி வருகின்றனர்.
இது குறித்து இயக்குநர் அகத்தியனிடம் பேசினோம், ``காதல் கோட்டை படம் வெளி வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. மிகப்பெரிய வெற்றிப்படமான காதல் கோட்டை, எனக்கு மட்டுமல்ல, தேவயானிக்கும் பெரிய புகழை கொடுத்தது. நான் தேவயானியை என் மகளாக வழி நடத்தினேன். அதே போல் அவரும் அப்பாவாக என்னை நினைத்து அப்பாவுக்கான மரியாதையை கொடுத்தார். எனக்கும், தேவயானிக்குமான அப்பா - மகள் உறவு எப்போதும் தொடர்ந்தன.
ஒரு பெண்ணோட கணவர்கிட்ட இன்னொரு ஆண் மரியாதை பெறுவது என்பது பெரிய விஷயம். தேவயானியின் கணவர் ராஜாகுமாரன் என் மீது மிகுந்த மரியாதை காட்டினார். அப்போது தான் எனக்கு, தேவயானி என்னைப்பற்றி ராஜகுமாரனிடம் எவ்வளவு உயர்வாக சொல்லியிருக்கிறார் என்பது தெரிந்தது. என்னோட ஒரு படத்தில் அவர் நடித்திருந்தாலும், என்னோட மூன்று மகள்கள் திருமணத்திலும் கலந்து கொண்டார். என்னை அப்பானு கூப்பிடும் அன்பு மிக்க குழந்தை அவர். நிகழ்ச்சி உள்ளிட்டவையில் எப்போதாவது சந்தித்து கொள்வது வழக்கம்.
இந்த சூழலில் ஊரில் இருந்து என்னோட அக்கா போன் செய்து `வீட்டுக்கு விருந்தாடி வந்திருக்காங்க’னு சொன்னார். எனக்கு புரியல, `என்னக்கா சொல்ற யார்க்கா வந்திருக்கா?’னு கேட்க டக்குனு போனை வாங்கி, `அப்பா, நான் வீட்டுக்கு வந்திருக்கேனு’ சொன்னார் தேவயானி. எனக்கு ஒரே ஆச்சர்யம். `உங்களோட ஊர்னு கேள்விபட்டதும் பாக்க வந்துட்டேனு சொன்னதும்’ நான் நெகிழ்ந்துட்டேன். அவர் நன்றியுணர்வோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அப்பா- மகளுக்கான அன்பு தான் இதை நிகழ்த்தியிருக்கிறது” என்றார்.