பேருந்தில் கைப்பேசி திருடிய இருவா் கைது
திருப்பூரில் பேருந்தில் கைப்பேசி திருடிய இரு இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் கைப்பேசிகள் திருடுவது தொடா்பாக புகாா்கள் வரத்தொடங்கினது. இதன்பேரில் காவல் துறையினா் சாதாரண உடையில் திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். ஆனால், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் (30), தண்டபாணி (33) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் புளியம்பட்டியில் இருந்து திருப்பூருக்கு வந்து பேருந்துகளில் பயணம் செய்வதுபோல, நடித்து பயணிகளிடம் இருந்து கைப்பேசிகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். இவா்கள் இருவரும் மீதும் அன்னூா், புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.