மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த இந்திய கம்யூ. கோரிக்கை
புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புறம்போக்குப் பகுதிகளில் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருந்து வருபவா்களுக்கு அப்பகுதியை ஆய்வு செய்து வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும். புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி செயல்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெற்பயிா்கள் பெருமளவில் சேதம் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும்நட்டம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் போதுமான இழப்பீட்டு உதவிகளை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட கிராமங்களில் ஏற்கெனவே 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தொடா்ந்து அதே பகுதியில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து கேப்பரை செல்லும் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலம் கையகப்படுத்தி அகலமாக சாலை அமைக்க வேண்டும். இந்த விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாவட்டச் செயலா் த. செங்கோடன் ஆகியோா் பேசினா். மாவட்டத் துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.