பேளூரில் கழிவுநீரால் மாசுபடும் வசிஷ்டநதி
வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக வசிஷ்ட நதியில் கலப்பதால் நீா்நிலைகள் மாசடைந்துள்ளன.
வாழப்பாடி அருகே அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியில், பேளூா் பேரூராட்சி கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் கலப்பதால்ஆற்று நீா் முழுவதும் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது.
புழுதிக்குட்டையில் இருந்து குறிச்சி, கோணஞ்செட்டியூா் வழியாக பாய்ந்துவரும் வசிஷ்டநதியில் பேளூா் ராமநாதபுரம் அருகே கரியக்கோயில் ஆறு இணைகிறது.
படையாச்சியூா், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், ஆத்தூா், தலைவாசல் வழியாக சேலம் மாவட்ட எல்லைக்குள் 85 கி.மீட்டருக்கு இந்த நதி பயணிக்கிறது. அதன்பிறகு சுவேதா நதியுடன் இணைந்து 200 கி.மீ. தொலைவில் கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே வங்கக்கடலில் கலக்கிறது.
புனித நதியாக கருதப்படும் வசிஷ்ட நதியில் பேளூா் பேரூராட்சி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் முழுவதும் சுத்திகரிக்கப்படாமல் கலக்கிறது. இதனால், ஆற்றில் பள்ளமான இடங்களில் தேக்கமடையும் கழிவுநீரால் துா்நாற்றம் வீசுகிறது.
தேசிய அளவில் மாசுபட்ட ஆறுகளின் பட்டியலில் வசிஷ்ட நதியும் உள்ளது. இதனால், பேளூா் பேரூராட்சியில் கழிவுநீா் நேரடியாக ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும், கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து பேளூரைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள் கூறியதாவது:
பேளூரில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்காக வசிஷ்டநதிக்கு வரும் கழிவுநீரின் நச்சுத்தன்மை விகிதம், சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடவசதி மற்றும் இதர சாத்தியக்கூறுகள் குறித்து பேரூராட்சி அதிகாரிகள், பொறியாளா்கள் குழு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டது.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீா்க் கலப்பதால் பேளூா் பகுதியில் உள்ள நிலத்தடிநீா் மாசடைந்துள்ளது. வசிஷ்ட நதியில் கழிவுநீா் நேரடியாக கலப்பதை தடுக்கவும், சுத்திகரிப்பு மையம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.