பைக் டாக்ஸிகளுக்கு நெருக்கடி! நடவடிக்கைக்கு தமிழக அரசு உத்தரவு!
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழக போக்குவரத்து ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸிகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை எளிதில் கடக்கவும், நீண்ட தொலைவு சென்றாலும் குறைந்த கட்டணம் போன்ற பைக் டாக்ஸிகளின் முக்கிய அம்சங்கள் மக்களை ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க : திருவண்ணாமலை தீபம்: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை -தமிழக அரசு
ஆனால், காப்பீடு இல்லாமல் பலரும் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸிகளாக பயன்படுத்துவதால், விபத்து ஏற்பட்டால் அதில் பயணம் செய்வோருக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நாள்தோறும் மாலை 7 மணிக்கு சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“பைக் டாக்ஸிகளுக்கு ஒருபுறம் வரவேற்பும், மறுபுறம் எதிர்ப்பும் இருக்கும் நிலையில், பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்து சிறு விபத்து ஏற்பட்டாலும், நீதிமன்றத்தில் இழப்பீடு மறுக்கப்படுகிறது.
வாடகை பைக்குகள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிப்பது மத்திய அரசுடன் ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்.
பைக் டாக்ஸிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்தால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் சூழல் ஏற்படும்.
ஆகவே, ஆய்வு நடத்தப்பட்டு பைக் டாக்ஸி விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.