போரூர் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!
சென்னை போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் வளசரவாக்கம் மண்டலம் 11-க்கு உள்பட்ட சென்னை போரூர் அருகே உள்ள சின்ன போரூர் பிரதான சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. சுமார் 10 அடி அகலம் மற்றும் 5 அடி நீளத்திற்கு ஏற்பட்ட பள்ளத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்லும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தின் அருகே தடுப்புகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குடிநீர் குழாய் இணைப்பில் ஏற்பட்ட உடைப்பே திடீர் பள்ளத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
அதே சமயம் சின்ன போரூர் பகுதியில் இதுபோல் திடீர் பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருப்பதால் இதுகுறித்து மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.