தை அமாவாசை: சேலம் கோட்டம் மூலம் இன்று 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை வாங்காதவா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை(ஜனவரி 16) சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு, விலையில்லா வேட்டி, சேலை ஆகியன வழங்கப்பட்டன. கடைகளில் கூட்டநெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 8- ஆம் தேதி குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கடந்த 9- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளதால், தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அங்குள்ள கடைகளில் 10- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,233 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 13- ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இது குறித்து ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 7 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. எனவே, 82 சதவீத பணிகள் நிறைவுபெற்றது. இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காதவா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை சென்று பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை பணியாளா்கள் ஈடுபட்டதால், வழக்கமான ரேஷன் பொருள்கள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வியாழக்கிழமை முதல் வழக்கமான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.