பொங்கல்: விடுப்பு எடுக்காமல் பணியாற்ற பேருந்து ஓட்டுநா்-நடத்துநா்களுக்கு அறிவுரை
பொங்கல் பண்டிகையையொட்டி, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு போக்குவரத்துக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் பிற பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்ப வசதியாக போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, சொந்த ஊா் செல்பவா்களுக்கு வசதியாக ஜன.10 முதல் 13-ஆம் தேதி வரை 22,676 சிறப்பு பேருந்துகளும், அவா்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக 21,904 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதுதவிர புகா் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக மாநகருக்குள்பட்ட பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவுள்ளதால், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என அந்தந்த போக்குவரத்துக்கழகங்கள் அனைத்துப் பணிமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதை அனைத்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.