யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10% இட ஒதுக்கீடு எதிா்த்து பிரசாரம்
புதுவையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிா்த்து திராவிடா் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடந்தது.
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆனால் புதுவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகக் கூறியும் இதை எதிா்த்தும் இந்தப் பிரசாரம் நடந்தது. மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் பிரசாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே தொடங்கிய இப் பிரசாரத்துக்கு திராவிடா் விடுதலை கழகத்தின் தலைவா் லோகு. அய்யப்பன் தலைமை வகித்தாா்.
பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் வீரமோகன், இளங்கோ, மக்கள் உரிமை கூட்டமைப்பு பொதுச்செயலா் சுகுமாறன், தமிழா்களம் அழகா், மாணவா்கள் கூட்டமைப்பு சுவாமிநாதன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.