போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு! ரூ.1.41 லட்சம் அபராதம்!
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா்.
ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனை, பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாடு சிலை, ஆட்சியா் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில் மதுபோதையில் வாகன இயக்கியதாக 21 நான்குசக்கர வாகன ஓட்டிகள் உள்பட 113 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் சென்ாக 827 வழக்குகள், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 8, வாகன காப்பீடு இல்லாது 115, போக்குவரத்து சிக்னலை மீறியதாக 3 வழக்குகள், இருசக்கர வாகனத்தில் மூவா் பயணித்தது 29 வழக்குகள், வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கியது 109 வழக்குகள், கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கியது 39 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியது 6 வழக்குகள், விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியது 8 வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனச் சோதனையில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக உறுதி செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்ட 57 வாகன ஓட்டுநா்களின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெற்கு போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.