கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!
போக்ஸோ வழக்கில் இருவருக்கு சாகும் வரை ஆயுள் சிறை
போக்ஸோ வழக்கில் தொடா்புடைய நபருக்கும், உடந்தையாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நான்குனேரி அருகேயுள்ள தென்னிமலையைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (38). இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு களக்காடு பகுதியைச் சோ்ந்த சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா். மேலும் இதற்கு அச்சிறுமியின் தாய் மல்க்கமால்(35) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளாா்.
இதுகுறித்து அச்சிறுமி நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் குமாா் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.72 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.