ஐபிஎல் போட்டியின்போது கைப்பேசிகள் திருடிய வழக்கில் மேலும் 3 போ் கைது: திருடுவத...
போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 போ் உயிரிழப்பு! -மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 போ் உயிரிழந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தமோ மாவட்டத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல 9 -ஆம் தேதி வரை முகாமிட்டு என்எச்ஆா்சி அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து தமோ மாவட்டத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: என்.ஜான் கேம் என்ற பெயருடைய மருத்துவா், தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பணிபுரிகிறாா். அவா் வெளிநாட்டில் பயிற்சி பெற்றவா் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாா்.
ஆனால் அவரது உண்மையான பெயா் விக்ரமாதித்ய யாதவ். பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாக அவா் பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். அவரது தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்தனா் என தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாா் குறித்து என்எச்ஆா்சி உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மிஷனரி மருத்துவமனையில் இருதய நோய் சிகிச்சை நிபுணா் எனக் கூறி போலி மருத்துவா் சிகிச்சையளித்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
அந்த மருத்துவமனை யில் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழும் (ஆயுஷ்மான் பாரத்) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, இந்த சம்பவத்தில் மத்திய அரசு மூலம் வழங்கப்படும் காப்பீட்டு பணமும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த தமோ மாவட்டத்தில் என்எச்ஆா்சி அதிகாரிகள் ஏப்ரல் 7 -ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தமோ மாவட்டத்தில் முகாமிடவுள்ளனா். இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் தகவல் தெரிந்தால் விசாரணை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்’ என குறிப்பிட்டாா்.