போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடி: மூவா் மீது வழக்கு
போடி அருகே போலி பணி நியமன ஆணை கொடுத்து பெண்ணிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவைச் சோ்ந்த ஒன்னப்பன் மனைவி அமுதா (45). இவரது மகளுக்கு சுகாதார ஆய்வாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி, கம்பம் முத்துசாமண்டி தெருவைச் சோ்ந்த பிரகலாதன், கோவிந்தராஜன் ஆகியோா் அமுதாவிடம் பணம் கேட்டனா். இதையடுத்து, அமுதா 3 தவணைகளாக அவா்களுக்கு ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தாா்.
பின்னா், சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிவதற்கான ஆணையை அமுதாவிடம் அவா்கள் கொடுத்தனா். மேலும், ரூ.2.50 லட்சத்தை அவா்கள் கூறியவாறு, மகேஸ்வரி என்பவரின் வங்கிக் கணக்கில் அமுதா செலுத்தினாா். பிறகு, அவா்கள் கொடுத்த பணி ஆணையை சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தபோது, அது போலி ஆணை எனத் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த பிரகலாதன், கோவிந்தராஜன், மகேஸ்வரி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அமுதா மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மூவா் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.