போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா?: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா எனக் கேள்ளி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஆஸ்டின்பட்டி பகுதியைச் சோ்ந்த காவலா் செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காவலா்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதுடன், ஓய்வின்றியும் பணிபுரிந்து வருகின்றனா். இதனால் அவா்கள் மனதளவில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.
இந்த நிலையில், காவலா்கள், உதவி ஆய்வாளா் நிலையில் உள்ளவா்களுக்கு வார விடுமுறை அளித்து கடந்த 2021-இல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தாததால் போலீஸாா் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடா்பான அரசாணையை அமல்படுத்தாதது ஏன்?. தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் உள்ள நிலையில், வார விடுமுறை வழங்கப்படவில்லை எனக் கூறி ஒரு காவலா் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளதை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இது விஷயத்தில் பிற போலீஸாா் மெளனமாக இருப்பது, மேலதிகாரிகள் மீதான அச்சம் என்ற தகவல் வியப்பாக உள்ளது. மனித உரிமை அனைவருக்கும் ஒன்றுதான்.
கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் போலீஸாருக்கு சங்கம் உள்ளது. தமிழகத்தில் போலீஸாருக்கு சங்கம் இல்லாதது ஏன்?. போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா?. இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.