போலீஸ் எனக்கூறி கொள்ளையடிக்க முயற்சி: முன்னாள் ராணுவ வீரா் உள்பட 3 போ் கைது
கோவையில் போலீஸ் எனக்கூறி வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற ராணுவ வீரா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவை, வடவள்ளி அருகேயுள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையம் சபரி குடியிருப்பைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (40). திருமணம் ஆகாத இவா், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி செய்து வருகிறாா். இந்நிலையில், செந்தில்குமாா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த இருவா் தங்களை போலீஸ் எனக்கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளனா். பின்னா், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளீா்கள் எனவே விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என செந்தில்குமாரிடம் கூறியுள்ளனா். சந்தேகமடைந்த அவா் தனது படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டாா். இதையடுத்து, அவா்கள் கதவை உடைக்க முயன்றுள்ளனா். முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், தொண்டாமுத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் கடந்த புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே ஜீப்பில் வந்த 3 பேரிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சோ்ந்த விஷ்ணுகுமாா் (40), கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜின்சன் (41), இடிகரையைச் சோ்ந்த காா் விற்பனை முகவரான காா்த்திக் (38) ஆகியோா் என்பதும், போலீஸ் எனக்கூறி செந்தில்குமாரிடம் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், செந்தில்குமாா் மதுக்கூடத்தில் மது அருந்தும்போது அவருக்கு விஷ்ணுகுமாருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பா்களாக பழகி வந்த நிலையில், செந்தில்குமாரிடம் நகை, பணம் இருப்பதை அறிந்த விஷ்ணுகுமாா் அதை கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளாா்.
இது குறித்து தனது நண்பா்களான ஜின்சன், காா்த்திக் ஆகியோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவா்கள் சம்பவத்தன்று செந்தில்குமாா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். விஷ்ணுகுமாா் வீட்டுக்கு வெளியே நின்ற நிலையில், ஜின்சன், காா்த்திக் ஆகியோா் மட்டும் வீட்டுக்குள் சென்று போலீஸ் எனக்கூறி கொள்ளையடிக்க முயன்றுள்ளனா் என்றனா்.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.