ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்
மத்தியப் பிரதேசத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் பலியானார்கள்.
மேலும் 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், போபாலுக்கு அனுப்பப்பட்டார்.
மீதமுள்ளவர்கள் விதிஷா மற்றும் லேடேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தூரிலிருந்து சிரோஞ்சிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக ஆட்சியர் அன்ஷுல் குப்தா தெரிவித்தார்.
பலியானவர்கள் நாராயண் (20), கோகுல் (18), பசந்தி பாய் (32) மற்றும் ஹஜாரி (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
நாட்றம்பள்ளி: வனப்பகுதியில் விட்ட கரடி வனத்துறையினரை தாக்க முயற்சி
விபத்து நடந்த உடனேயே, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், உள்ளூர் பாஜக எம்எல்ஏ உமாகாந்த் சர்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.