சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி வங்கிக் கடன்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்
மகளிா் திட்டம் சாா்பில் 1,973 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.
மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அதன்படி, கோவை, ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து மகளிா் திட்டம் சாா்பில் 1,973 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: மகளிா் முன்னேற்றம், அவா்கள் மீதான அக்கறையால் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். கோவை மாவட்டத்தின் மீது முதல்வா் தனி கவனம் செலுத்தி வருகிறாா். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, மகளிா் சுய உதவிக் குழு உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்ததுடன், உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.
அவரது வழியில் தற்போது அரசுப் பணி, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு சம வாய்ப்பை முதல்வா் அளித்துள்ளாா். மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை முதல்வா் சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா் என்றாா்.
சேஃப் கோவை திட்டம் தொடக்கம்: கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள 200 பேருந்து நிறுத்தங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக (ள்ஹந்ா்) சேஃப் கோவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இந்தத் திட்டத்தை அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 352 பயனாளிகளுக்கு ரூ.3.74 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியையும் அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் மதுரா, மண்டலக் குழுத் தலைவா் தெய்வயானை தமிழ்மறை, பணிகள் குழுத் தலைவா் சாந்தி முருகன், வருவாய் கோட்டாட்சியா் (தெற்கு) ராம்குமாா், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத் தலைவா் கனிமொழி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கமலகண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.