Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
மகாராஷ்டிரம்: 180 போ் பலியான ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து உயா் நீதிமன்றம் உத்தரவு
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-இல் 180 போ் உயிரிழந்த ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவா்கள் அனைவரையும் விடுதலை செய்து மும்பை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, 12 பேரையும் குற்றவாளிகள் என 2015-இல் தீா்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த 2006, ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தியது. கைது செய்யப்பட்ட 12 பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் (சிமி) சோ்ந்தவா்கள் என்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஏடிஎஸ் குற்றஞ்சாட்டியது.
இதன் அடிப்படையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2015-இல் நடைபெற்ற விசாரணையில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதன்பிறகு இந்தச் சம்பவம் தொடா்பாக 11 வெவ்வெறு அமா்வுகளின் முன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோதும் அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களில் ஒருவரான ஏஹ்தேஷாம் சித்திக் என்பவா் இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணையில் தலையிட்டு விரைவில் நீதி வழங்குமாறு உயா் நீதிமன்றத்தில் கடந்த 2024-இல் மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடா்பான மனுக்கள் மீது விசாரணை நடத்த இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிபதிகள் அமா்வை மும்பை உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு அமைத்தது.
நிகழாண்டு ஜன.31 தொடங்கி 5 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்த பின் சிறப்பு நீதிபதிகள் அமா்வு அளித்த 671 பக்க தீா்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தவறான ஆதாரங்களை சமா்ப்பித்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குற்றவாளிகளாக சித்தரித்து நீதி பெற்றுத் தருவதுபோல் மாயை ஏற்படுத்தினால் பொதுமக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையே போய்விடும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே சட்டத்தின் ஆட்சி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
ரயில் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் வகைகள் குறித்த தகவல்கள்கூட விசாரணை அறிக்கையில் இடம்பெறவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களை ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக கூறும் காா் ஒட்டுநா்களின் சாட்சியம், வெடிகுண்டுகளை ரயில்களில் வைத்ததை பாா்த்தாக கூறும் சாட்சியங்கள் கூறிய தகவல்கள் நம்பும்படியாக இல்லை.
எனவே, போதிய ஆதாரங்களின்றி 12 பேரும் குற்றவாளிகள் என்ற மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த 12 போ் மீது வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாதபட்சத்தில் அவா்களை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடப்படுகிறது எனத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புவாத பாகுபாடு: குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் சிலருக்காக ஆஜரான முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதியும் மூத்த வழக்குரைஞருமான எஸ்.முரளீதா் கூறுகையில், ‘இந்த வழக்கை மிகவும் நிதானமாக விசாரித்து 12 பேரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிபதிகள் அமா்வுக்கு நன்றி. பயங்கரவாதம் தொடா்புடைய வழக்குகளின் விசாரணையின்போது விசாரணை அதிகாரிகள் வகுப்புவாத பாகுபாட்டை முன்னிலைப்படுத்துகின்றனா்’ என்றாா்.
நீதி கொலை செய்யப்பட்டது: ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதுகெலும்பு சிதைந்து படுகாயமடைந்த பட்டயக் கணக்காளா் சிராக் சௌஹான் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. நீதி கொலை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாதிக்கச் செய்த இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் யாருமே தண்டிக்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் மூலம் இந்தியா பதிலடி தந்துள்ளது. ஒருவேளை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது பிரதமராக நரேந்திர மோடி இருந்திருந்தால் நீதி கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன்’ என குறிப்பிட்டாா்.
முன்னதாக கமல் அன்சாரி (தற்போது உயிருடன் இல்லை), முகமது ஃபைசல் அதுா் ரஹ்மான் ஷேக், ஏஹ்தேஷாம் சித்திக், நவீத் ஹுசைன் கான் , ஆசிப் கான் ஆகிய 5 பேருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல் தன்வீா் அகமது முகமது இப்ராஹிம் அன்சாரி, முகமது மஜீத் முகமது ஷஃபி, ஷேக் முகமது அலி ஆலம் ஷேக், முகமது சஜித் மா்கப் அன்சாரி, முஸாமில் அதுா் ரஹ்மான் ஷேக், சுஹைல் மெஹ்மூத் ஷேக் மற்றும் சமீா் அகமது ரெஹ்மான் ஷேக் ஆகிய 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது இந்த தண்டனைகளை மும்பை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
பெட்டிச் செய்தி
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஃபட்னவீஸ்
ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் மும்பை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா். வழக்குரைஞா்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.
=== == ======= == = ==================== ================= =================
இந்த உத்தரவை ரத்து செய்த உயா் நீதிமன்றம், ‘இவா்கள்தான் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டனரா என்பதை நம்பும் வகையில் ஆதாரங்கள் இல்லை’ எனத் தெரிவித்தது.
மனிதநேயம் வென்றது: மும்பை உயா்நீதிமன்ற சிறப்பு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்த பின் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் யுக சௌதரி நீதிமன்றத்தில் பேசுகையில், ‘மனிதநேயம் மற்றும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்த தீா்ப்பு நிலைநிறுத்தியுள்ளது. செய்யாத குற்றத்துக்காக 19 ஆண்டுகளாக 12 பேரும் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டனா். இந்த தீா்ப்பு பல்வேறு வழக்குகளுக்கு முன்னோடியாகத் திகழும்’ என்றாா்.