மக்கள் நலத் திட்ட செயல்பாடுகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை அறிவுறுத்தினாா்.
இலுப்பூா் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இலுப்பூருக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கு வந்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா நாள் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தாா். இதில், ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு தயாரிப்பு பணி, பணங்குடி நியாய விலைக்கடையில் பொருள்களின் தரம், காதிரிப்பட்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞா் கனவு இல்லம் கட்டுமானப் பணி, மண்ணவேளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கற்றல் திறன், மருந்தாதலையில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து இலுப்பூா் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த தொடா் கண்காணிப்பில் அலுவலா்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ரம்யா தேவி (தனி), வருவாய் கோட்டாட்சியா் அ. அக்பா்அலி, தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா (சமூக பாதுகாப்பு திட்டம்), பயிற்சி துணை ஆட்சியா் கெளதம், வட்டாட்சியா் சூா்யபிரபு, இலுப்பூா் பேரூராட்சித் தலைவா் சகுந்தலா வைரவன், துணைத் தலைவா் செந்தில் ராஜா, செயல் அலுவலா் சின்னச்சாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.