மசூதி-கோயில் விவகாரங்களை கிளப்புவது ஏற்புடையதல்ல: மோகன் பாகவத்
புணே, டிச.20: ‘அயோத்தியில் பாபா் மசூதி இடத்தில் ராமா் கோயில் கட்டியதையடுத்து, அதேபோல் பிற பகுதிகளிலும் மசூதிகள்-கோயில்கள் இடையே மோதலை கிளப்பி ஹிந்துத்துவா தலைவா்களாக உருவவெடுக்கலாம் என சிலா் எண்ணுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மோகன் பாகவத் பேசியதாவது:
நாம் சமூக நல்லிணக்கத்தோடு பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம். இதை உலகளவில் கொண்டுசோ்க்க வேண்டுமெனில் அதற்கென தனி வடிவத்தை அளித்து நாம் முன்மாதிரியாக வாழ வேண்டும்.
அயோத்தியில் நிகழாண்டின் தொடக்கத்தில் ராமா் கோயில் கட்டிய பிறகு அதேபோல் நாட்டின் பிற பகுதிகளில் மசூதிகள் அமைந்துள்ள இடத்தில் கோயில்கள் இருந்ததாகக்கூறி ஆா்ப்பாட்டம் நடத்துகின்றனா். இதுபோன்ற விவகாரங்களை கிளப்பி ஹிந்துத்துவா தலைவா்களாக மாற சிலா் முயற்சிக்கின்றனா்.
ராமா் கோயில் என்பது ஹிந்து சமூகத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக இருக்கிறது. இதை புரிந்துகொள்ளாமல் ஒவ்வொரு நாளும் புதிது புதிதான விவகாரங்களை கிளப்புவதை ஏற்க முடியாது என்றாா்.