மணப்பாறையில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், வாடகை பாக்கி வைத்திருந்த நகராட்சி கடைகளை ஆணையா் தலைமையில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை (பிப்.5) பூட்டி சீல் வைத்தனா்.
மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையக் கடைகள், மதுரை ரோடு கடைகள், பூங்கா சாலை கடைகள், பா்மா பெட்டி கடைகள், நாளங்காடி நுழைவாயில் கடைகள், நாளங்காடி கடைகள், திருச்சி ரோடு ஒருவழி பாதை கடைகள் மற்றும் கோவில்பட்டி சாலை கடைகள் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு கடை வைத்துள்ளவா்களில் சிலா் பலமுறை வாடகை நிலுவைத் தொகையை செலுத்த கோரி நேரிலும், தொலைபேசி மூலமும், ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவுறுத்தியும் வாடகை செலுத்தாமல் அதிக நிலுவை வைத்துள்ளனா்.
இதில் ரூ. 212.48 லட்சம் பாக்கி இருந்த நிலையில் ஆணையா்(பொ) போ.வி.சுரேந்திரஷா தலைமையில், வருவாய் ஆய்வாளா் வி.ராஜேந்திரன் நகராட்சி மேலாளா் பி. நல்லதம்பி, நகர அமைப்பு ஆய்வாளா் எம். சிவக்குமாா், இருக்கை எழுத்தா் டி. கருப்பையா மற்றும் வருவாய் உதவியாளா்கள், தூய்மை மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்கள் வாடகை நிலுவை வைத்துள்ள 76 கடைகளில் 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனா்.
மேலும் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி மற்றும் கடை வாடகையை செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரித்துள்ளனா்.