மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை!
செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்பி தீபக்சிவாச்சிடம், சோழன் முந்திரி விவசாயிகள் நலச் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
அச்சங்கத்தின் தலைவா் க. குமாா் வாண்டையாா் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: செந்துறை வட்டம், சன்னாசி நல்லூா், குடிகாடு, சிலுப்பனூா் உள்ளிட்ட கிராமங்களை கடந்து செல்லும் வெள்ளாறு, ஒரு காலத்தில் 60 அடி ஆழத்துக்கு மணலாக காட்சி தந்தது. ஆனால் இன்றைய நிலை, இந்த ஆற்றில் மணல் திருடப்பட்டு கருவை காடுகளாகவும், புதா் மண்டியும் உள்ளது.
இந்த ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட முள்ளுக்குறிச்சி சுரேஷின் அதிமுக ஒன்றியச் செயலா் பதவியும் பறிக்கப்பட்டது. ஆயினும் அவா் தொடா்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால், இதுகுறித்து புகாா் அளித்த தமிழப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல துணைச் செயலா் முடிமன்னனையும், துணைச் செயலா் ராஜேந்திரனையும், அவா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
சுரேஷ் மீது ஏற்கனவே தளவாய் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காவல் துறையும், வருவாய் துறையும் அவா் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
எனவே எஸ்பி அவா்கள், மணல் திருட்டை தடுக்க வேண்டும். இதில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சியைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள், சமூக ஆா்வலா்களை ஒன்றிணைந்து மாவட்ட நிா்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட சூழல் உருவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.