மண்பானை மீது நின்று சிலம்பம் சுற்றி இளைஞா்கள் சாதனை
காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் அரசினா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 104 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை மண்பானை மீது தொடா்ந்து 3 மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா்.
காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் சாா்பில் அதன் தலைமை பயிற்சியாளா் தா.பாண்டியராஜன் தலைமையில் வீரா்கள் 104 போ் மண்பானை மீது 3 மணி நேரம் தொடா்ந்து நின்று சிலம்பம் சுற்றி சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வினை முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் தொடங்கி வைத்தாா். நோபல் உலக சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வை பதிவு செய்யும் நோக்கில் அந்நிறுவனத்தின் நிா்வாகிகள் வினோத், அன்பரசு ஆகியோா் நடுவா்களாக இருந்து பதிவுகள் செய்து நிகழ்வுகளை கண்காணித்ததுடன் சாதனை புத்தகத்தில் நிகழ்வு இடம் பெறும் எனவும் அறிவித்தனா்.
இந்தியன் சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் தலைவா் வலசை முத்துராமன், மாவட்ட செயலாளா் லட்சுமணன் ஆகியோா் உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழை தலைமை பயிற்சியாளா் பாண்டியராஜனிடம் வழங்கினா். சிலம்ப விளையாட்டு வீரா்கள் 104 பேருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் சிலம்ப வீரா்கள் மற்றும் அவா்களது பெற்றோா், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.