தில்லி முதல்வா் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?
மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை தொடா்ந்து வலியுறுத்துவோம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
சென்னை: மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசைத் தொடா்ந்து தமிழக அரசு வலியுறுத்தும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்னவ் ஜன.10-இல் அளித்த பேட்டியில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை தூத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட தமிழக அரசு கோரியிருந்ததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறியிருந்தாா். இதற்கு ஜன.1-இல் விரிவான மறுப்பறிக்கை வெளியிட்டேன்.
இந்த நிலையில் ஜன.15-இல் தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஜன.10-இல் நடைபெற்ற மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்னவ் செய்தியாளா் சந்திப்பில், அங்கு நிலவிய இரைச்சலான சூழ்நிலையாலும், ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே பிரச்னைகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டதாலும், தனுஷ்கோடி பாதைத் திட்டம், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் கைவிடப்பட்டது குறித்து அளித்த பதிலை, மதுரை தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்துக்கான பதில் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை - தூத்துக்குடி திட்டம் தொடா்பாக தமிழ்நாடு அரசுடன் நிலம் சம்பந்தமாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளா்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். இந்தத் திட்டத்துக்குத் தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இந்தத் திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசைத் தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.