நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரை: மக்களை ஈர்க்கும் வேளாண் சுற்றுலா... கூத்து, கொண்டாட்டத்துடன் பிரபலமாக்கும் சுற்றுலாத்துறை!
ஆன்மிக சுற்றுலா, பசுமை சுற்றுலா, வரலாற்று தொல்லியல் சுற்றுலா, உணவு சுற்றுலா வரிசையில் தற்போது வேளாண் சுற்றுலா மதுரையில் பிரபலமாகி வருகிறது.
அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டின் அரசியலுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் வர்த்தகம், கலை பண்பாட்டின் தலைநகரமாகவும் விளங்குகிறது மதுரை.!
மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு புரதானக்கோயில்களை காணவும், பாண்டியர், நாயக்கர், பிரிட்டிஷார் ஆட்சியின் பெருமைமிகு அடையாளங்களை ரசிக்கவும், கீழடி, சமணர் மலைகள் போன்ற தொல்தமிழரின் நாகரிகத் தடங்களைக் கண்டு வியக்கவும் மக்கள் மகிழ்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இங்கு தயாராகும் சுங்குடிச்சேலை, வேட்டிகள், பல்வேறு பிராண்டுகளின் ரெடிமேட் ஆடைகள், கைத்தறி துண்டுகள், உலோக பாத்திரங்கள், ஊறுகாய், அப்பளம் என மொத்த கொள்முதலுக்காகவும் வெளியூர் மக்கள் வர்த்தக ரீதியாகவும் வருகிறார்கள்.
நள்ளிரவிலும் சுடச்சுட கிடைக்கும் இட்லி, கறிதோசை, வெங்காயக்கறி, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், பன் பரோட்டோ, கொத்து பரோட்டா, பருத்திப்பால், முள்ளு முருங்கை வடை என விதவிதமான சைவ -அசைவ உணவுகளுக்காகவும் மதுரைக்கு விரும்பி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது வேளாண் சுற்றுலாவுக்கும் மதுரை பிரபலமாகி வருகிறது.
மதுரையை சுற்றி மேலூர், திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி வட்டாரத்தில் நடைபெறும் வேளாண் தொழில்களை காணவும், கிராமப்புற மக்களின் வாழ்வியலை தங்கியிருந்து உணரவும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து மக்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் காலங்களில் அவ்வப்போது வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் வேளாண் சுற்றுலாவை இன்னும் அதிகமாக பிரபலப்படுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள வேளாண் சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், விவசாயத்தின் அவசியத்தை உலகம் முழுவதும் அறியச் செய்யவும் 'டிஸ்கவர் தமிழ்நாடு 2024' என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனியார் அமைப்புகளுடன் இணைந்து வேளாண் சுற்றுலாவை, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது.
இதற்காக, சமீபத்தில் மதுரை செட்டிகுளம் கிரேஸ் கார்டனில் வேளாண் சுற்றுலா மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டில் விளையக்கூடிய காய்கறிகள், பழங்கள், நன்செய், புன்செய் பயிர்கள் இங்கு விளைவிக்கப்பட்டுள்ளன. ஆடு, கோழி, நாட்டின மாடு போன்ற கால்நடைகளும் இங்கே வளர்க்கப்படுகின்றன.
அன்றாட உணவுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே விளைவிக்கப்படுகின்றன. கிரேஸ் கார்டன் மற்றும் டெர்னம் ஹோம்ஸ் இணைந்து, மதுரை காரியாபட்டி அருகில், 35 ஏக்கரில் வேளாண் கிராமம் உருவாக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் மாதிரி வேளாண் கிராமங்களை அமைக்க உள்ள டெரனம் ஹோம்ஸ் ஆனந்த் ரவிச்சந்திரன், கிரேஸ் கார்டன் நிறுவனர் அருள் ஜேம்ஸ் எட்வின்தம்பு, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலாளர் ஜெனட், மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
'உலக சுற்றுலா தினத்தை' முன்னிட்டு செப்டம்பர் 27ம் தேதி தொடங்கிய நிகழ்வு ஒரு மாதமாக மதுரையில் நடந்து வருகிறது. நிகழ்வின் ஒரு பகுதியாக, 'இன்ஃப்ளுயன்சர்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற நிகழ்வுக்கும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள பிரான்ஸ், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்ஸ் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர். இவர்கள் மூலமாக தமிழ்நாட்டு வேளாண் சுற்றுலா மற்றும் மற்ற சுற்றுலாத்தலங்களை வெளிநாட்டில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் குழுவினருடன் விதைப்பது, பயிரிடுவது, உரமிட்டு அறுவடை செய்வது முதல் பல்வேறு வேளாண் தொழில்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
கிராமிய இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், கொம்பு இசை, பறை இசை, மரக்கால், மானாட்டம், மயிலாட்டம், கிழவன் கிழவி ஆட்டம், பொய்க்கால் ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மண்பாண்டங்கள், பனைகள் நேரடியாக தயாரித்தும் காட்டப்பட்டன. மேலும் இயற்கை நீர் குளியல், கயிறு இழுத்தல் உரியடிப் போட்டி போன்ற தமிழர் மரபு சார்ந்த நிகழ்சிகளும் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட வெளிநாட்டு, வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுடன் மதுரை மக்களும் கலந்துகொண்டு மகிழ்ந்து ரசித்தார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb