மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. மாநகா்ப் பகுதிகளில் மாலை 5 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை ஏறத்தாழ 45 நிமிடங்கள் நீடித்தது. அவ்வப்போது மிதமான மழையும், பெரும்பாலான நேரங்களில் லேசான மழையும் பெய்தது. இதனால், மாநகரின் ஒரு சில பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது.
இதேபோல, மேலூா், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை 5 மணி முதல் 5.45 மணி வரையும், திருப்பரங்குன்றம், விமான நிலையம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் லேசான, மிதமான மழை பெய்தது.
மழை பெய்த நேரத்திலும், அதற்குப் பின்னரும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டது. தல்லாகுளம், நாகணாகுளம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.