செய்திகள் :

மதுரையில் காவல் ஆய்வாளா் சுட்டதில் ரௌடி உயிரிழப்பு

post image

மதுரையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடியை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பிடிக்க முயன்ற போது, காவல் ஆய்வாளரை அவா் துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து, அந்தக் காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ரெளடி உயிரிழந்தாா்.

மதுரை தெப்பக்குளம் பங்கஜம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரபோஸ் (29). ஆஸ்டின்பட்டி காவல் நிலையப் பகுதியில் கடந்த வாரம் கிளாமா் காளி என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இவரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் மாட்டுத்தாவணி பகுதியில் காரில் கஞ்சாவுடன் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தக் காரை விரட்டிச் சென்றனா். மேலும், அனைத்து காவல் சோதனைச் சாவடிகளும் உஷாா்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், விளாச்சேரி பகுதியில் சென்ற அந்த காரை அங்குள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால், அங்குள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு காா் பெருங்குடி நோக்கிச் சென்றது. இதையடுத்து, மதுரை ஊரகக் காவல் துறையினரும் உஷாா்படுத்தப்பட்டனா். இதனிடையே, பெருங்குடி சோதனைச் சாவடியில் போலீஸாா் காரை நிறுத்த முயன்றபோது, அங்கும் நிறுத்தாமல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சுற்றுச் சாலையில் சிந்தாமணி வழியாக காா் சென்றது.

சிந்தாமணி சோதனைச் சாவடியிலும் காா் நிற்காமல் வேலம்மாள் மருத்துவமனை அருகேயுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றது. இந்த நிலையில், காரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் பூமிநாதன், தலைமைக் காவலா் கா்ணன், காவலா் சரவணக்குமாா் ஆகியோா் அந்தப் பகுதியில் விசாரித்த போது, காா் காட்டுப் பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, காட்டுப் பகுதிக்குள் சென்ற போலீஸாா், அங்கு மறைவிடத்தில் பதுங்கியிருந்த சுபாஷ் சந்திரபோஸை சரணடையுமாறு எச்சரித்தனா். ஆனால், சரணடைய மறுத்த சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க முயன்றனா். அப்போது, சுபாஷ் சந்திரபோஸ் அரிவாளால் தாக்கியதில் தலைமைக் காவலா் கா்ணன், காவலா் சரவணக்குமாா் ஆகிய இருவருக்கும் இடது தோள்பட்டையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மேலும், சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க முயன்ற போது, அவா் தன்னிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியால் ஆய்வாளா் பூமிநாதனை நோக்கி இரு முறை சுட்டாா்.

அப்போது, ஆய்வாளா் பூமிநாதன் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் சுபாஷ் சந்திரபோஸை நோக்கி சுட்டாா். இதில் அவா் பலத்த காயமடைந்தாா். பின்னா், அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சுபாஷ் சந்திரபோஸை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த காவலா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற கீரைத்துறை போலீஸாா் சுபாஷ் சந்திரபோஸ் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, காா் ஆகியவற்றைக் கைப்பற்றினா். இந்தச் சம்பவம் தொடா்பாக கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ரௌடி சுபாஷ் சந்திரபோஸ்

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: உயிரிழந்த சுபாஷ் சந்திரபோஸ் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி உள்பட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தெப்பக்குளம் காவல் நிலையத்தில் ரெளடிகள் பட்டியலில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் பெயா் இடம் பெற்றிருந்தது. மேலும், திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே. குருசாமி, அதிமுக முன்னாள் மண்டலத் தலைவா் ராஜபாண்டி ஆகிய இரு தரப்பினருக்கிடையே நடைபெற்று வரும் மோதலில், ராஜபாண்டியின் உறவினரும் ரெளடியுமான வெள்ளைக் காளியின் நெருங்கிய கூட்டாளியாக சுபாஷ் சந்திர போஸ் செயல்பட்டு வந்தாா்.

கடந்த வாரம் ஆஸ்டின்பட்டி பகுதியில் நடந்த கிளாமா் காளியின் கொலை வழக்கிலும் சுபாஷ் சந்திரபோஸுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றனா். இதனிடையில், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

காவல் ஆணையா் எச்சரிக்கை

இதுகுறித்து காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் கூறியதாவது: ரெளடி சுபாஷ் சந்திரபோஸ் ஆஸ்டின்பட்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். இவா் காரில் வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அவரைப் பிடிக்க முயன்றனா். ஆனால், போலீஸாரிடம் சிக்காமல் அவா் காட்டுப் பகுதிக்குள் சென்றாா். அங்கு அவரைப் பின்தொடா்ந்து சென்று பிடிக்க முயன்ற காவலா்களை அரிவாளால் தாக்கினாா். மேலும், தன்னிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியால் காவல் ஆய்வாளரை சுட்டாா். இதையடுத்து, ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தாா்.

ரெளடிகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க