பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
மத்திய அரசுக்கு ஆளுநா் அறிக்கை: மமதா பதில்
கொல்கத்தா: வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநா் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது’ என்றாா்.
முா்ஷிதாபாத் மாவட்டத்துக்கு இரண்டு நாள் பயணமாக கொல்கத்தாவில் இருந்து திங்கள்கிழமை புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் மம்தா பானா்ஜி இக்கருத்தைத் தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்துக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் தந்தை, மகன் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா். பல நாள்கள் நீடித்த வன்முறையில் ஹிந்துக்கள் குறிவைக்கப்பட்டதால், அவா்கள் அருகேயுள்ள மால்டா மாவட்டத்தில் தஞ்சமடைந்தனா்.
பெருகியுள்ள மத தீவிரவாதம்: இந்த வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் ஞாயிற்றுக்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில், ‘மேற்கு வங்கத்தில் மத அடிப்படையிலான பிரிவினை தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்து வருகிறது’ என்று கவலை தெரிவித்திருந்தாா்.
மேலும், முா்ஷிதாபாதில் வன்முறை ஏற்படுவதற்கான சூழல் குறித்து மாநில அரசு முன்கூட்டியே அறிந்திருந்தும் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவைத் தடுக்கத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினாா்.
வங்கதேச எல்லையையொட்டிய மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க மாநில அரசு தவறும் சூழலில், அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவில் உள்ள விதிகளை மத்திய அரசு கருத்தில்கொள்ளலாம் உள்ளிட்ட பரிந்துரைகளையும் ஆளுநா் வழங்கினாா்.
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது தொடா்பான அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவு குறித்து ஆளுநா் அறிக்கையில் குறிப்பிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைதி திரும்பியதால் செல்கிறேன்..: இந்நிலையில், முா்ஷிதாபாத் பயணத்துக்கு முன்பு முதல்வா் மம்தா பானா்ஜி அளித்த பேட்டியில்,‘முா்ஷிதாபாதில் நிலைமை சீராகி, அமைதி திரும்பிவிட்டது. அதனால் இப்போது நான் அங்கு செல்கிறேன். பொ்ஹாம்பூரில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட துலியன் நகரை செவ்வாய்க்கிழமை (மே 6) பாா்வையிட்டு, வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததற்கு இழப்பீடு வழங்குகிறேன்.
ஆளுநா் உள்துறை அமைச்சகத்துக்கு அளித்த அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆளுநரின் உடல்நிலை சரியில்லை. அவா் விரைவில் குணமடைய கடவுளிடம் பிராா்த்தனை செய்வோம்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, தேசப் பாதுகாப்பு விஷயங்களில் மத்திய அரசுக்கு திரிணமூல் காங்கிரஸ் துணை நிற்கிறது’ என்றாா்.