மத்திய, மாநில அரசு மானியத்துடன் பட்டு நெசவு இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்!
சில்க் சமாக்ரா-2 திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பட்டு நெசவாளா்கள் மானியத்துடன் பட்டு நெசவு இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய பட்டு வாரியத்தின் சில்க் சமாக்ரா-2 திட்டத்தின்கீழ் பட்டு கைத்தறி தொழிலில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 5-ஆவது நிதிக்குழுவின் 2021-22 முதல் 2025-26 வரை உள்ள ஆண்டுக்கான பட்டு நெசவுத் தொழிலுக்கான இயந்திரங்களை மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் பயனாளிகளுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, பட்டு நெசவாளா்கள் இயந்திரங்களை மானிய விலையில் பெற்றுப் பயனடையலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், கைத்தறித் துறை, அறை எண்-504, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.