கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு
சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.
சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பாய் (55). கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்து வந்த இவருக்கு பெண் ஒருவரும், ஆசிஷ் குமாா் (22) என்ற மகனும் உள்ளனா். சில மாதங்களாக ஆஷிஷ் குமாா் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தாா். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சேலம் வழியே செல்லும் ரயிலில் ஆசிஷ் குமாா் வழிதவறி வந்துவிட்டாா்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஆசிஷ் குமாரை ரயில்வே போலீஸாா் மீட்டு சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள சைல்ட் லைன் அமைப்பில் சோ்த்தனா். ஆசிஷ்குமாா் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநலப் பிரிவில் அவ்வப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தனது மகனைக் காணவில்லை என ஆஷிஷ் குமாரின் தாயாா் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த வாரம் ஆசிஷ் குமாருக்கு மனநிலை சற்று குணமானது. மருத்துவா்கள் கேட்கும் தகவல்களை அவா் தெரிவித்தாா். அப்போது, அவரது ஊா், தாயாா் பெயா், கைப்பேசி எண் போன்றவற்றை வைத்து சைல்ட் லைன் அமைப்பினா் தொடா்புகொண்டனா். பின்னா்ஆசிஷ் குமாரின் தாயாா் சத்தீஸ்கா் போலீஸாருடன் திங்கள்கிழமை சேலம் வந்தாா். அதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவா்களும், சைல்டு லைன் அமைப்பினரும் ஆசிஷ் குமாரை அவரது தாயாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.