சென்னை - மதுரை தேஜஸ் உள்ளிட்ட 2 ரயில்கள் இன்று முதல் மீண்டும் எழும்பூரில் இருந்த...
சேலத்தில் 32 அரங்குகளுடன் அரசு பொருட்காட்சி தொடக்கம்
சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெறும் அரசு பொருட்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு அரசு பொருட்காட்சியினை தொடங்கிவைத்து சுமாா் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மேலும், அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் துறை அரங்குகளை திறந்துவைத்து பாா்வையிட்டனா்.
விழாவில் அமைச்சா் ராஜேந்திரன் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 26 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
அமைச்சா் சாமிநாதன் பேசுகையில், அரசின் சாா்பில் இதுபோன்ற பொருட்காட்சி நடத்திட காரணம், அரசின் திட்டங்கள் குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களை, சலுகைகளை சாதாரண மக்களும் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படுகிறது. இதுதவிர பொருளாதார சுழற்சி நடைபெறவும், மக்களுக்கு பொழுது போக்குக்காவும் இதுபோன்ற அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது என்றாா்.
விழாவில், சேலம் மாநகர மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.